December 28, 2016

மருந்தாகும் ரோஜா

வீட்டில் அருகில் உள்ள உணவுப்பொருட்கள் கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ரோஜாவின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். ரோஜா மணம் தருவது மட்டுமின்றி வயிற்று கோளாறை சரிசெய்யும் தன்மை கொண்டது. ரத்த கசிவை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. தோலுக்கு மென்மை தருவதோடு, சுருக்கங்களை போக்குகிறது. உள், வெளி மருந்தாக பயன்படுகிறது.

ரோஜாவை பயன்படுத்தி சளி, இருமல், செரியாமை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். மருந்துக்காக பயன்படுத்தும்போது பன்னீர் அல்லது நாட்டு ரோஜா பூக்களை எடுத்துக்கொள்வது நல்லது. ரோஜா பூக்களின் இதழ்களை எடுக்கவும். இதனுடன் ஒரு ஏலக்காய், 2 கராம்பு தட்டிப்போடவும். சிறிய துண்டு எலுமிச்சை பழம் தோல் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால், நெஞ்சக சளி கரைந்து சுவாசபாதை சீராகும். செரிமான கோளாறை போக்கும். வாயுவை வெளியேற்றும். வயிறு உப்புசம் சரியாகும். தற்போதைய காலம் பனிக்காலம். நோய்கள் எளிதாக வரும். நெஞ்சக, வயிற்று கோளாறுகள் உண்டாகும். இப்பிரச்சனைகளுக்கு ரோஜா மருந்தாகிறதுரோஜாவுக்கு பன்னீர் பூக்கள் என்ற பெயர் உண்டு. நாட்டு ரோஜா மிகுந்த வாசனை உடையது. ரோஜாவை பயன்படுத்தி குமட்டல், வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம். ரோஜா பூ இதழ்களை சுத்தமான குளிர்ந்த நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வடிக்கட்டி இந்த தண்ணீரை குடித்துவர வாந்தி, குமட்டல் சரியாகும். இந்த நீரை கொண்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும். ரோஜா இதழ்கள் துவர்ப்பு சுவை உடையது. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி பிரச்னையை போக்கும் தன்மை உடையது. வயிற்று கடுப்பை சரிசெய்யும். செரிமானத்தை தூண்டக் கூடியது. வயிற்று புண்களை ஆற்றவல்லது.

ரோஜாவை கொண்டு அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். ரோஜா பூக்களின் இதழ்களை பசையாக அரைத்து எடுக்கவும். ஒரு ஸ்பூன் பசையுடன், ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து சாப்பிட்டுவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தபோக்கை கட்டுப்படுத்தும். வயிற்றுபோக்கை குணப்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் இதை தொடர்ந்து எடுத்துவர அல்சர் குணமாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும். வயிற்று கடுப்பு, வலியை போக்கும். ரோஜாவை பயன்படுத்தி ரத்தசோகையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ரோஜா இதழ்களை அரைத்து பசையாக்கி, அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர ரத்தசோகை குணமாகும். ரோஜாவை சூடுவதால் மனதுக்கு இதமான சூழல் ஏற்படும். மன அழுத்தம் குறையும். இதன் மணமே மருந்தாகிறது

0 comments:

Post a Comment