செவ்வாய் கிரகத்தில் நாசா ஆய்வுக்கலம்
சூரிய
குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின் நடமாடும் ஆய்வுக்கலமான ஆப்பர்டியூனிடி
(Opportunity) புதிய சாதனை படைத்திருக்கிறது.
செவ்வாய்க்கிரகத்தில் இந்த ஆய்வுக்கலம் இதுவரை 40 கிலோமீட்டர் தூரத்தை பயணித்திருக்கிறது. இதுவரை காலமும் இப்படிப்பட்ட ஆய்வுக்கலங்கள் பயணித்த அதிகபட்ச தூரத்தை இந்த ஆப்பர்டியூனிட்டி ஆய்வுக்கலம் முறியடித்திருப்பதாக நாசா கூறுகிறது.
இதில்
சுவாரஸியமான செய்தி என்னவென்றால் இந்த தானியங்கி ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கும் இடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தாலே போதும் என்று தான் நாசா முதலில் எதிர்பார்த்தது.
நாசா
விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை முறியடித்து 40 கிலோமீட்டர் தூரம் வரை இந்த ஆய்வுக்கலம் வெற்றிகரமாக பயணித்திருப்பது மிகப்பெரிய சாதனை என்கிறது நாசா நிறுவனம்.
கடந்த
பத்து ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் பயணம் செய்துவரும் இந்த நடமாடும் ஆய்வுக்கலமானது, செவ்வாய் கிரகத்தில் முன்பு நீர் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டுபிடித்திருப்பதுடன் தனது ஆய்வுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அது
தற்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை இலக்கு வைத்து சென்று கொண்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில் வெளிப்பட்டிருக்கும் களிமண் கனிமங்களை இது அடுத்த கட்டமாக ஆராயும்.
இதற்கு
முன்பு சந்திரனை ஆராய்வதற்காக ரஷ்யாவால் அனுப்பப்பட்ட லுனோகோட்-2 என்கிற ஆய்வுக்கலம் 1973 ஆம்
ஆண்டு ஏற்படுத்திய பயண சாதனை தான் சூரிய குடும்ப கிரகங்களுக்கு அனுப்பப்பட்ட ஆய்வுக்கலங்களின் அதிகபட்ச முந்தைய பயண சாதனையாக பார்க்கப்பட்டது.
0 comments:
Post a Comment