April 30, 2019

தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் அழிந்து போகுமா?

தேனீ க்கான பட முடிவு
 சில இடங்களிலும் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை காக்க கடும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். காரணம் அந்த காடுகள் அவர்களின் வாழ்விடங்கள்.
அங்கு இருக்கும் மூலிகைகளும், மரங்களும்,தேனும் அவர்களின் வயிறுகளுக்கு உணவிடுகின்றன.நகரத்தில் தேனீக்கள் கூடுகட்ட போவதில்லை.தேனீக்கள் நகரத்தின் பரபரப்பில் இருப்பது இல்லை.
காடுகளின் அமைதியான சூழலில் இருந்து தான் பல அரிய பொருட்கள் மனிதனுக்கு கிடைக்கின்றன.மனிதனின் உடல் நலனை காக்கும் பல பொருட்கள் காடுகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் தேன் அதிசயமான ஒரு அமிர்தம்.
தேன் எடுத்து வந்து நாம் உண்டு விடுகிறோம். தேனீக்களின் உணவான அவை தேனீக்கு கிடைக்காமல் போகிறது. ஆனால் தேனீக்கள் அவற்றை பற்றி கவலைப்படுவதில்லை. அடுத்த இடத்தில் கூடுகட்ட போய்விடுகின்றன. தேனீக்கள் பார்க்க உருவத்தில் சிறிது தான். ஆனால் அவற்றின் வாழ்க்கை முறையும், அவை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடமும் ஏராளம். ஆனால் நாம் தான் அதை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை காக்கவும் முன்வருவதில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டின் ஒரு விமான நிலைய உயர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவர் வீட்டில் சில தேன்கூடுகளை வைத்து தேனீக்களை வளர்ப்பதை பற்றி சொன்னார். பிரமித்து போனேன். எப்போதும் பிசியாக இருக்கும் இவரா தேனீக்களை வளர்க்கிறார் என்ற ஆச்சரியமாக இருந்தது.
அவர் தேனீக்களை பற்றி சொன்னது மிகவும் ஆச்சரியப்படத்தக்க தகவலாக இருந்தது. இதோ….
பெண்ணின் ஆட்சி
” தொடக்க காலத்தில் மனித வாழ்க்கையில் பெண்களுக்கு தான் முக்கிய இடம் இருந்தது. அதாவது தாய்வழிச்சமுதாயம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது தான். பெண்கள் தான் ஆங்காங்கே இருந்த மனித குழுக்களின் தலைவியாக இருந்திருக்கிறாள். விவசாயம் உள்ளிட்டவைகளில் அவர்கள் தான் ஈடுபட்டு அந்த குழுக்களுக்கு உழைப்பதற்கான வழியை காட்டியிருக்கிறார்கள். காலப்போக்கில் பெண்ணடிமை சமுதாயம் உருவாயிருக்கிறது. ஆனால் தேனீக்கள் குழுவில் அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் ஆட்சி தான்.
தேனீக்களில் குடும்பத்தில்(காலனி) ராணி தேனீ, ஆண்தேனீ,வேலைக்கார தேனீ என்ற மூன்று வகையான தேனீக்கள் இருப்பதுண்டு. இதில் வேலைக்கார தேனீக்கள் பூக்களுக்கு சென்று தேனை எடுத்து வந்து கூட்டில் சேர்க்கும். ராணி தேனீ முட்டையிட்டு தேனீக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். ஆண்தேனீ வழக்கமான சோம்பேறி என்று வைத்துக் கொள்ளலாம்.
தேனில் பலவகை இருக்கின்றன. ஒவ்வொன்றும் குணத்தில் மாறுபட்டவை.மாமரம், வேப்பமரம் போன்ற மரங்களின் உச்சாணிக் கொம்பில் கூடுகட்டி இந்த மரங்களின் பூக்களில் தேன் எடுக்கும் தேனீக்களின் தேனுக்கு கொம்புத் தேன், மலை உச்சியில் யாரும் தொட முடியாத தூரத்தில் இருந்து கொண்டு பலவகையான காட்டு மரங்களில் எடுக்கும் தேனுக்கு மலைத்தேன் என்று பெயர். இப்படி இருக்கும் இடத்திற்கு ஏற்றபடி தேன் பல பெயர்களை கொண்டிருக்கிறது.இது ஒரு புறமிருக்கட்டும்.
இந்த தேனீக்கள் பூக்களுக்கு பூக்கள் சென்று தேனை எடுக்கும் போது தான் மனித குலம் வாழ தேவையான காய்கனிகள் உற்பத்திக்கான செயல்பாடு தொடங்குகிறது. இந்த தேனீக்கள் பூக்களில் அமரும் போது அந்த பூக்களில் இருக்கும் மகரந்தங்கள் அவற்றின் கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. ஆண்மகரந்தங்கள் இப்படி தேனீக்களின் கால்களில் அமர்ந்து பயணம் செய்து மற்றொரு பூவின் பெண் சூலகத்தில் போய் அமரும் போது பூக்களின் கருவுறுதல் நடைபெறுகிறது. பூக்கள் காய்களாக மாறி கனிகளாக மாறுகின்றன. ஆக…மனிதனுக்கு வேண்டிய காய்கறிகள் உற்பத்தியாவதற்கு தேனீக்கள் மறைமுகமாக உதவி செய்கின்றன. இதை தாவரவியலாளர்கள் அயல் மகரந்த சேர்க்கை என்கிறார்கள். அதாவது நமது உறவு முறையை விட்டு விட்டு தூரத்து உறவு முறையில் காதல் திருமணம் செய்து போல, எங்கோ பல மைல் தொலைவில் இருக்கும் இரண்டு செடிகளின் பூக்களை தனது கால் என்னும் காதலால் இணைக்கின்றன இந்த தேனீக்கள்.அதாவது
நாள் தோறும் கோடிக்கணக்கான மலர்களை சென்று அமர்ந்து தேனை எடுக்கும் தேனீக்கள் பூக்களை கருவுர செய்ய உதவும் தூதுவனாக இருக்கின்றன. ஆக…தேனீக்களால் நாள் தோறும் பல கோடி மலர்கள் பூவிலிருந்து காயாக மாறும் நிகழ்வுக்கு போகின்றன.
தேனீக்கள் இல்லாமல் போனால்…
ஆக…இதிலிருந்து தெரிய வருவது, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து போனால் அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். பிறகு மனிதனுக்கு தேவையான காய்கறிகள்,பழங்கள் எங்கிருந்து கிடைக்கும்?
ஒரு  புறம் மக்கள் தொகை கடுமையாக பெருகி வரும் நிலையில் உணவு உற்பத்தி குறைந்து போனால்….என்ன ஆகும்?
மனித இனமும் அழிய தொடங்கும்.சத்துஇல்லாத உணவுகளால் உடல் நலம் பாதிக்கும்.எளிதாக தொற்று நோய்கள் மனிதனை தாக்கும்.
பிறகு மானிட குலத்தின் கதி?
இந்த கேள்விக்கு பல வெளிநாட்டு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த ஒரே விடை …எக்காரணம் கொண்டும் தேனீக்களை அழிந்து போக விடக்கூடாது என்பது தான். ஆக இப்போது வெளிநாடுகளில் பல தனிநபர்கள் கூட தேனீக்களை வீடுகளில் வளர்ப்பதை ஒரு சமூக சேவையாக நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். சிறிய தேன் கூடுகளை வைத்து தேனீக்களை உற்பத்தி செய்கிறார்கள்.

தேனை தனியாக சாப்பிட்டால் பலன்
 • தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல், இருதயத்தில் ஏற்படும் வலி,பலவீனம் ஆகியவற்றை போக்கும்.
 • குடலில் ஏற்படும் புண்களை(அல்சர்) ஆற்றும். கல்லீரலில் ஏற்படும் நோய்களை போக்கும்.
 • தேனைக்குறைந்த அளவு அருந்தினால் மலச்சிக்கலை போக்கும். அதிக அளவு அருந்தினால் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
 • பேதியை நிறுத்தும்.ரத்தசோகையை போக்கும்(இந்திய பெண்கள் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்),நரம்புகளுக்கு வலிமையை தரும். நீர்க்கோவையை சரி செய்யும். சிறுநீர்க்கழிவை குறைக்கும்.
 • தோல் சம்பந்தமான நோய்கயை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். கிருமி,நாசினியாக வேலை செய்யும்.பற்கள்,கண்கள் ஆகியவற்றுக்கு பலம் தரும். தொண்டையில் ஏற்படும் தொற்றுநோய்,வலியை குறைக்கும்.
 • உடல்குண்டானவர்களை மெலிய செய்யும்.உடலுக்கு ஊட்டச்சத்து தரும்.சுவாச காச நோய்களை குணமாக்கும். விக்கல் நோயை போக்கும்.
 • உடலில் விஷம் இருந்தால் முறிக்கும். சூலரோகங்களை போக்கும்.உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக இயங்க செய்யும். நீண்ட ஆயுளை தரும். பெண்களின் கருப்பையில் இருக்கும் நோய்களை குணப்படுத்தும். குழந்தைகளை ஊட்டத்துடன் வளர்க்க பயன்படும்.
சரி..தேனை குளிர்ந்த நீருடன் கலந்து பருகினால் அதன் நோய்தீர்க்கும் குணம் மாறும்.அதை பார்க்கலாம்.
 • தேனுடன் குளிர்ந்த நீரை கலந்து அருந்தினால்(மண்பாணை தண்ணீர் சிறப்பு) அருந்தினால் உடலின் ஊளைச்சதை குறையும்.களைப்பு உடனே நீங்கும்.
 • தேனுடன் காய்ச்சிய பசும்பாலை கலந்து அருந்தினால் உடல் வலிமை அடையும்.தாதுவிருத்தி ஏற்படும்.
 • ஆட்டின் பாலை வடிகட்டி தேனுடன் அருந்தினால் உடலுக்கு தேவையான ரத்தத்தை ஊறச்செய்யும்.
 • ரோஜா இதழ்கள் கல்கண்டு,தேன் ஆகியவற்றை கலந்து தயாரிக்கும் குல்கந்தை சாப்பிட்டால் உடலின் சூடுதணிந்து உடல் குளிர்ச்சியடையும்.
 • 100 மிலி பசுவின் பாலையும், 100 மிலி தண்ணீரையும் கலந்து இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் மறைந்திருக்கும் நோய்க்காரணங்கள் மறைந்து போகும்.
 • காய்ந்த திராட்சை பழங்களை தேனில் ஊறவைக்க வேண்டும். ஊறியவுடன் காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் உடல் அழகு பெறும்.
 • ஒரு கோழி முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி தேன்கலந்து அருந்தி விட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் களைப்பு அடையாது. வலிமை அதிகரிக்கும்.
 • அருகம்புல்லை தட்டி கசாயம் எடுத்து தேனைக்கலந்து அருந்தினால் பல நோய்களை குணமாக்கும். களைப்பு என்பதே இருக்காது.
 • கணைச்சூட்டினால் குழந்தைகள் மெலிந்து காணப்படுவார்கள். குழந்தையின் பெற்றோருக்கு பல டாக்டர்களிடம் காட்டியும் ‘ என்ன சாப்பிட்டாலும் குழந்தை தேறமாட்டேன்கிறதே..’ என்பார்கள். இந்த குழந்தைகளுக்கு தினசரி ஆட்டுப்பாலில் இரண்டு சொட்டு தேனை கலந்து கொடுத்தால் கணைச்சூடு நீங்கி குழந்தை அழகு போட்டியில் இடம் பெறும் அளவு குண்டாகிவிடும்.
 • இளநீரில் தேன் கலந்து அருந்தினால் உடல் சூடு சட்டென்று தணிந்து போகும்.
 • அத்திப்பழங்களை 48 நாட்களுக்கு தேனில் ஊறவைத்து(இது சர்வோதாய சங்கங்களில் கிடைக்கும்) தினசரி ஒன்றிரண்டு சாப்பிட்டால் உடல் வலிவு பெறும்.
 • மஞ்சள் காமாலை உள்பட காமாலைநோய் கண்டவர்கள் தினமும் தேன் சாப்பிட்டால் காமலை குறைவதுடன் பின்விளைவுகளும் இருக்காது.
 • இஞ்சியை இடித்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து அது நன்றாக தெளியும். இந்த தெளிந்த சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்று செரிமானம் சரியாகும். உண்ட உணவு உடனே செரித்து விடும். எங்காவது ருசியாக இருக்கிறதே என்று கண்டதையும் சாப்பிடுபவர்கள் உடனே இதை செய்தால் சீரணம் உடனே உறுதி.
பெண்களின் முக அழகுக்கு தேன்
வெள்ளைக் கோதுமை மாவு ஒரு கரண்டி அதனுடன் தேன் கலந்து சில துளிகள் பன்னீரையும் விட்டு நன்றாக பிசைந்து, பின்பு இன்னும் பன்னீர் விட்டு கொஞ்சம் பிசைந்து முகத்தில் சிறிது நேரம் பூசி வைத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி முகத்தை பருத்தி துணியால் ஒற்றி எடுக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை எளிதான இந்த முறையை செய்து வர உங்களின் முகம் “கார்னியர் நேச்சுரல்,பேர் அன்ட் லவ்லி,வீகோடர்மரிக்’ எல்லாவற்றையும் தோற்கடிப்பது உறுதி. பிறகு உங்கள் முகம் ‘விண்ணாடிக்கீழ்க்கடலில் விரிந்து வரும் பரிதியிலே கண்ணாடி ஏரியென கதிர்சாய்க்கும் வட்டமுகம்’ஆக மாறி விடும்.பிறகென்ன….எல்லாம் நலமே!

0 comments:

Post a Comment