April 22, 2014

கம்பியில்லா மின்சாரத் தொழில்நுட்பம் (Wireless Electricity Technology)

மின்சார சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை வயர்கள் எதுவுமின்றி வழங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.கம்பியில்லாமல் மின்காந்த துாண்டல்(Electro-Magnetic Induction) முறையில் கைத்தொலைபேசிகளை மின்னேற்றக்கூடிய தொழில் நுட்பங்களைப்பற்றி (Wireless Charging) நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்.

இதனைவிட முன்னேற்றகரமாக வீட்டிலுள்ள மின்சார சாதனங்களை மின்சார வயர்களின்றி இயக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு பாவனைக்கு வரவுள்ளன. இத்தொழில்நுட்பத்தின் மூலம் மடிக்கணணிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற சாதனங்களை இயக்குவதுடன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வயர்களின்றி இலகுவாக மின்னேற்றிக்கொள்ள முடியும். மேலும் இயந்திர மனிதனுக்கு தேவையான மின்சாரத்தை வயர்களின்றி வழங்கவும் முடியும்.

கம்பியில்லாமல் மின்சாரத்தை கடத்தும் முறைகள் மிகவும் பாதுகாப்பானவையாக காணப்படுகின்றன. மேலும் கம்பியில்லா கருவிகள் (wireless devices) என நாம் அழைக்கும் கருவிகள் உண்மையில் மின்சாரத் தேவைக்காக வயர்களால் இணைக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால் கம்பியில்லா மின்சாரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதுதான் இவை உண்மையான கம்பியில்லா (truly wireless) கருவிகளாகின்றன. இவற்றின் அசைதிறனும் (mobility) அதிகரிக்கின்றது.

இனி இதற்காக பயன்படுத்தப்படும் தொழில்னுட்பத்தை இலகுவான முறையில் விளங்கிக்கொள்வோம். கம்பிச் சுருளொன்றிற்கு ஆடலோட்ட (AC) மின்சாரத்தை வழங்கும்போது அது மாறுகின்ற காந்தப் புலமொன்றை தன்னைச்சுற்றி தோற்றுவிக்கும். இவ்வாறே மாறுகின்ற காந்தப்புலமொன்றில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருளொன்றில் ஆடலோட்ட மின்சாரம் துாண்டப்படும். இவ்வாறான மின்காந்த தத்துவம் மின்மாற்றிகளில் (Transformer)  ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு கம்பிச் சுருளிலிருந்து இன்னொரு கம்பிச் சுருளுக்கு மின் இணைப்பு இல்லாமலேயே மின்காந்த துாண்டல் முறையில் சக்தி கடத்தப்படுகிறது. இதன்போது இரு சுருள்களுக்குமிடையில் காந்த இணைதல் (Magnetic Coupling) ஏற்படுகின்றது.
மின்காந்த தூண்டல்
                                            Photo Credit:Wikimedia Commons, CC BY BillC

மின்சக்திக் கடத்தலை மிகவும் திறனுள்ளதாக்குவதற்காக (Efficient) பரிவுக் காந்த இணைதல் (Magnetic Resonance Coupling) எனும் முறையொன்று பயன்படுத்தப்படுகிறது. காந்த இணைதலில் ஈடுபடும் இரு கம்பிச்சுருள்களும் அண்ணளவாக ஒரே இயற்கை அதிர்வெண்ணை (Natural frequency) கொண்டிருக்குமாயின் அவற்றுக்கிடையே ஒரு காந்தப் பரிவு (Magnetic Resonance) ஏற்பட்டு அதிகரித்த சக்திப் பரிமாற்றம் நிகழும். இந்த முறையிலேயே கம்பியில்லா மின்சாரம் கடத்தப்படுகின்றது.

இனிவரும் காலங்களில் மடிக்கணணிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற சாதனங்கள் கம்பியில்லா மின்சாரத் தொழில்நுட்பத்துடன் பாவனைக்கு வருமென எதிர்பார்க்கலாம்.


Sources:

0 comments:

Post a Comment