நவீன யுகத்தில் வாழ்கின்ற நாம் இன்றைய அறிவியல் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படும் அதேவேளை அறிவியல் என்பது தனிப்பட்ட ஒரு சிலரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு அல்லல்படுகின்றது-பணத்தைப்போல. அது மக்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளாக மாறாதவரை அதை மனித சமுதாயத்திற்கான அறிவியல் வளர்ச்சி என்று கூறமுடியாது.
குறிப்பாக இன்றைய அறிவியல் வளர்ச்சி, நம் பண்பட்ட நாகரீக வாழ்க்கையின் பண்பாட்டுத்தளங்களை அழித்து போலியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கி வருவதோடு சுற்றுச் சூழலில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் விளைவாக ஓசோன் படலத்தில் ஓட்டை, நீர்வளம் குறைதல், நிலம் சூடாதல் மற்றும் வேதியியல் பொருட்களால் நஞ்சாதல், காற்று மாசடைதல் போன்றவை நிகழ்கின்றன. இதனால் நம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவுகின்ற நிலம், நீர், காற்று போன்றவை பாதிப்புக்குள்ளாகி வருவதால் நாம் நெருக்கடியான சூழலில் சிக்கிக்கொண்டு திணறுகிறோம்.
இன்றைய வாழ்க்கை முன்னேற்றப்பாதையை நோக்கி செல்வதாக கூறிக் கொள்கிறோம். ஒருபுறம் மேலைத்தேய நாகரீக வாழ்க்கையின் விளைவாக நம் வாழிடங்களை குப்பை மேடுகளாக மாற்றி வருகிறோம். மறுபுறம் மரபுவழி வாழ்க்கையின் மூலம் நாம் காத்து வந்த நிலம், நீர், காற்று என்பவற்றை சீரழித்து வருகிறோம். அதை நாம் வளர்ச்சி என்றும் கூறிக்கொள்கிறோம்.
அப்படிப்பட்ட பகட்டாக நாம் கருதுகிற நாகரீக வாழ்க்கையின் வெளிப்பாடாக நாம் பல்வேறு பெருட்களைப் பயண்படுத்தி வருகிறோம். அப்படிப் பயண்படுத்துவதன் விளைவாக நம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்தான் நெகிழி (Plastic). நெகிழியை நாம் அளவுக்கு மீறி பாவித்து நமக்கு நாமே பல சிக்கல்களை உருவாக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாப்பதின் அவசியம் பற்றி நாம விளிப்போடிருப்பது அவசியம். ஆகவே இந்த சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யும் நெகிழியினால் ஏற்படுகின்ற விளைவுகளை இங்கு அறிந்து கொள்ள முயலுவோம்.
நெகிழி 20ம் நூற்றாண்டு அறிவியல் உலகத்தின் ஒரு கண்டுபிடிப்பு. நெகிழியிலான பொருட்கள் உடையாமலும், ஈரம்படாமலும், எடை குறைவாகவும், மின்கசிவு ஏற்படாமலும் இருப்பதால் அவற்றைப் பயண்படுத்துவதில் தவறென்ன என நினைக்கலாம். மேலும் அவற்றை குறை கூறி ஒதக்குவதால் அறிவியலை குறை கூறுவதோடு நாம் கற்காலத்திற்கு சென்று விடுவோம் எனவும் நினைக்கலாம். ஆனால் ஒரு பொருளின் பயண்பாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு அதன் சிறப்புகளை மதிப்பிட முடியாது. சுற்றுக்சூழலில் அதன் தாக்கத்தினை கருத்தில் கொள்ள வேண்டும். நெகிழி வேதியியல் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதால் அதன் வேதியியல் செயல்பாடுகள் முக்கியமானவை.
கரிய சேர்மத்துடன்(Carbon compound) கன்னெய் அல்லது இயற்கை வளி (Natural gas) இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் நீரகத்தையும் (Hydrogen) சேர்த்து கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில், உயர் வெப்பத்தினைச் செலுத்தி, நீர்க்கரிய விண்மி (Ethylene) என்ற தனி மூலக்கூறுகளைப் பெறுகிறார்கள். இவ்வாறான பல மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து பல விண்மி (Poly ethylene) பெறப்படுகிறது. இவ்வாறு தனி மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் செயல்முறையே பல படியாக்கம் எனப்படுகிறது. இந்தச் சேர்மம் உருக்கிய நிலையிலிருப்பதால் உருவாக்கும் முறைகளுக்கேற்ப பல வகைப்பட்ட நெகிழிப் பொருட்களைப் பெற முடியும். இன்னும் பல பொருட்களின் சேர்க்கையோடு பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 90 % பொருட்கள் வேதியியல் பொருட்களாக இருப்பதால் இதில் வேதியியல் தாக்கம் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.
Benzine, vinyl chloride போன்ற வேதிப் பொருட்கள்தான் புற்று நோய்க்குக் காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். அவையே நெகிழி உருவாக்கப் பயன்படும் பல்வேறு வேதிப்பொருட்களில் ஒன்று நெகிழி உருவாக்கத்pன்போது வெப்பமும் அழுத்தமும் ஒன்று சேர்ந்த வேதியியல் கலவைகளாக பல படிச் சேர்மங்கள் என்ற பொருள் உண்டாகிறது. இதில் நெகிழிமைத் தூண்டி என்ற வேதியியல் பொருட்களும், வண்ணத்திற்காக துனை வேதியியயல் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இத்தொடர் செய்முறைகளில் சில வேதியியல் கலப்புக்கள் ஒன்று சேராமல் அப்படியே தனித்திருக்கின்றன.
பல படிச்சேர்மங்கள் உணவுகளில் கரையாத, இயங்காத பொருளாக இருப்பதால் அது தீங்கற்றதாக இருக்கிறது. ஆனால்ஒன்று சேராத வெதியியல் கலவைகள் நெகிழியிலிருந்து வெளியேறும் தன்மை கொண்டிருப்பதோடு நச்சுப் பொருளாகவும் மாறுகிறது. அவை நெகிழி உறைகளில் அடைக்கப்படும்போது அப்பொருட்களில் கரைந்தோ அல்லது சேர்ந்தோ விடுகின்றன. இதனால் நச்சுத்தன்மையுள்ள நெகிழியை உண்பதோடு, நெகிழியுடன் கூடிய கலவைகளையும் நீங்கள் உண்ணக்கூடும்.
மேற்கண்ட தீங்குகளை கடந்த 15 ஆண்டுகளாக தைவான், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் தங்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்திருக்கின்றன.
நெகிழி வகைகள் பொதுவான பயண்பாடுகள் அஞ்சத்தக்க விளைவுகள்
பி.வி.சி -
கடன் அட்டைகளாக, செயற்கை இழைகளாலான செடிகளாக, பெவிகோல் போன்ற பசைகளாக, முக அழகுப் பொருட்களாக, கைப் பைகளாக, இளக வைக்கப் பயண்படும் பொருட்களாக, குழாய்களாக - இருப்பதிலேயே அதிக அஞ்சத்தக்க விளைவுகளை உண்டாக்கும், புற்றுநோய், குழந்தை பிறப்புக் கோளாறு, மரபுத் தன்மை மாற்றம்
அக்ரிலிக் -
பசைகளாக, தொடு வில்லைகளாக (கண்டக்ட் லென்ஸ்) செயற்கைப் பற்களாக, தரையைப் பளபளப்பாக்கும் மெழுகுகளாக - புற்று நோய்க்கு காரணமாகிறது என ஐயப்பட வைக்கிறது
பொலி எதிலீன் -
சமயலறைக் கருவிகளாக, பைகளாக, பொம்மைகளாக புற்று நோய்க்கு காரணமாகிறது என ஐயப்பட வைக்கிறது
பொலிஸ்டர் -
படுக்கை விரிப்புக்களாக, துணிகளாக, பயன்படுத்தி எறியும் குழந்தை துணிகளாக - மூச்சுக்குழாய் கண்களில் ஏற்படும் எரிச்சல்
நைலோன் -
பற்தூரிகைகளாக, சீப்புக்களாக, துணிகளாக - தோல் நோய்கள்
டெப்லோன் -
ஒட்டவே ஒட்டாது என விளம்பரப்படுத்தப்படும் சமையல் பொருட்களாக -கண் மூக்கு தொண்டை எரிச்சல் சுவாச சிக்கல்
ஸ்டைர்னஸ் -
பயன்படுத்தி தூக்கி எறியும் தட்டுக்களாக, குவளைகளாக, குளிர்சாதனப் பெட்டியிலுள்ள பொருட்களாக - கண் மூக்கு தொண்டை எரிச்சல் சுவாச சிக்கல்
யூரியா பார்மல்-டி-ஸைட்ரிசின் -
தடுப்பு அட்டைகளாக, ஒட்டுப் பலகைகளாக, மடிப்பு செய்யத் தேவையற்ற துணிகளாக - புற்று நோய்க்கு காரணமானது என ஐயப்பட வைக்கிறது
பாலியூரித்தேன் -
போம் படுக்கை மெத்தைகளாக - மூச்சுக்குழாயில் ஏற்படும் கடுமையான நோய், கண் மற்றும் தோலில் ஏற்படும் சிக்கல்
இத்தனை கேடுகளைக் கொண்ட நெகிழிப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அதிகமாக நுகரப்படுவதோடு சணல், மூங்கில், மரம், தோல்; போன்றவற்றை பயண்படுத்தி உருவாக்கப்பட்ட பொருட்கள் இன்று காணாமல் போக காரணமாகி விட்டன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற மரபான தொழில்கள் சரிவைக் கண்டன. நாம் இன்று நெகிழிப் பொருட்களுக்கு கொடுக்கும் விலை அதன் உருவாக்கத்திற்கு மட்டுமே. ஆனால் அதனுடைய தாக்கத்தால் சுற்றுக்சூழலக்கு ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கான செலவுகளையும் சேர்த்து நெகிழிப் பொருட்களுக்கான விலையைக் கணக்கிடத் தொடங்கினால் நெகிழியின் விலையும் கூடும் அதன் பயன்பாட்டினையும் குறைக்க முடியும்.
நம் பயண்பாடடிற்குப் பிறகு தூக்கி எறியும் நெகிழிப் பொருடகளுக்கு என்ன நடக்கின்றது தெரியுமா?
நகரத்தில் சேரும் கழிவுகளில் நெகிழிக் கழிவுப் பொருட்கள் மட்டும் 50 சதவீதத்திற்கம் அதிகம். இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை நம் பயண்பாட்டிற்கு பிறகு அல்லது 10 நாடகளுக்குள் தூக்கி எறியப்படுகின்றன. குறைந்தது 30 சதவிகிதம் ஒரு மாதம் வரையும் பயண்படுத்தப்படுகின்றது. மிகுதி 10 சதவிகிதம்தான் நீணடகாலம் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி வீசப்படும் கழீவுகள் நிலத்திலும் பல்வேறு இடங்களிலும் சேர்வதால் பல தீமைகள் ஏற்படுகின்றன.
நாம் தூக்கி எறியும் பொருட்கள் இயற்கைச்சூழலில் அழிவடைய ஆகும் கால அளவுகள்
வாழைப்பழத்தோல் 3 முதல் 4 கிழமைகள்
தாள் பைகள் 1 மாதம்
கிழிந்த துணிகள் 5 மாதங்கள்
கம்பளிக் காலுறை ஒரு ஆண்டு
மரம் 10-15 ஆண்டுகள்
தோல் காலணி 40-50 ஆண்டுகள்
தகர அடைப்பி 50-100 ஆண்டுகள்
அலுமினிய அடைப்பி 200-500 அண்டுகள்
நெகிழிப் பொருட்கள் மில்லியன் ஆண்டுகள்
இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பைகள் அதிக கேட்டினை சுற்றாடலுக்கு ஏற்படுத்துகின்றன. எறியும் பைகளை உண்டு விலங்கினங்கள் மடிதல், நில வளம் குன்றுதல், வெள்ளப்பெருக்கு போண்ற இன்ன பிற தீமைகள் ஏற்படுகின்றன. நெகிழிக் கழிவுப் பொருட்கள் மண்ணில் மட்காத காரணத்தால் அவை நிலத்திலும் நீரிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி நெகிழிக் கழிவுகள் வாய்க்கால்களிலும் வீதிகளிலும் எனக் கண்ட இடங்களில் தூக்கி எறியப்படுவதால் நீரோட்டம் தேக்கமடைந்து டெங்கு போண்ற பல்வேறு உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் செடி கொடிகளின் வளர்ச்சிக்கும், விலங்குகளின் இறப்பிற்கும் காரணமாகின்றன.
மேலும் நெகிழிப் பொருட்களைப் பயண்படுத்துவதால் குழந்தைப் பிறப்புப் பாதிப்புகள், மரபுத் தன்மையை உருவாக்கும் உயரணுவில் மாற்றங்கள், ஆண்மை இழப்பு, தோல் நோய்கள், மூச்சுக் குழாயைத் தாக்கும் கடுமையான நோய்கள், குடல் புண், செரியாமை, நரம்புத் தளர்ச்சி, புற்று நோய், குருதி, சிறுநீரக நோய்கள் மற்றும் உடலின் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் என்பதோடு இல்லாமல் இயற்கையையும் மிகக் கடுமையாக கேடுறச் செய்யும் செயலையும் ஏற்படுத்துகின்றது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே நமது சுகாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி நெகிழிப் பயண்பாட்டினை விடுத்து மாற்று முறைகளை பயண்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
0 comments:
Post a Comment