டிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன? சூறாவளி ஏன் வருகிறது? அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்திருந்தாலும், சாதாரண குடிமகன்களான நமக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதில்லை..
தமிழில் சூறாவளி அல்லது புயல் என்று நாம் அழைத்தாலும், ஆங்கிலத்தில் பல்வேறு பெயர்களால் இந்த வெப்பவலய புயல்களை அழைகின்றனர். தைபூன், கரிக்கேன் போன்ற வழக்குகள் அது வரும் இடத்தைப்பொறுத்து மாறுபடும், ஆனால் எல்லாமே இந்த வெப்பமண்டல புயல்கள் தான்.
வெப்பமண்டல சூறாவளி அல்லது புயல் என்பது, வெப்பமண்டல அல்லது வெப்பமண்டலத்தை அண்மிய சமூத்திரப்பிரதேசத்தில் ஏற்படும் குறைவழுத்த வளிமண்டல நிலைமையால் ஏற்படும் சுழற்சியான வேகமான காற்றும், அதனுடன் சேர்ந்த இடியுடன் கூடிய மழையையும் குறிக்கும்.
பொதுவாக இந்த வெப்பமண்டல புயல்களை பல நிலைகளில் பிரிக்கலாம்.
வெப்பமண்டல காற்றழுத்த சலனம் – வெப்பமண்டல, அல்லது வெப்பமண்டலத்தை அண்மிய பகுதிகளில் காற்றழுத்ததில் ஏற்படும் மாற்றம், கிட்டத்தட்ட 200 தொடக்கம் 600 கிலோமீட்டர் விட்டத்தைக்கொண்ட பரப்பில் உருவாகும் இந்த வித்தியாசம் 24 மணிநேரத்திற்கு மேல் அதே நிலையில் இருத்தல் வேண்டும்.
வெப்பமண்டல அழுத்தம் – காற்றழுத்த சலனத்தினால் ஏற்பட்ட சுழல்காற்றின் வேகம் மணிக்கு 62 கிலோமீட்டரை விட குறைவாக வீசும் பட்சத்தில் அது வெப்பமண்டல அழுத்தம் எனப்படும்.
வெப்பமண்டல புயல் – நீடித்த மேற்பரப்பு சுழல்காற்றின் வேகம் மணிக்கு 62 கிலோமீட்டரை விட கூடுதலாகும் போது அது வெப்பமண்டல புயலாகிறது.
சூறாவளி – இதுவே மேற்பரப்புக் காற்றின் வேகம் மணிக்கு 118km ஐ விட அதிகரிக்கும் போது அதனை நாம் சூறாவளி என்கிறோம்.
சூறாவளியை சபீர் சிம்சன் அளவுகோலின் படி 5 பிரிவுகளாக பிரித்துள்ளனர். இதில் பிரிவு 1 உக்கிரம் குறைந்ததாகும், பிரிவு 5 மிக உக்கிரமான சூறாவளி.
1978இல் இலங்கை தாக்கிய சூறாவளி, பிரிவு 3ஐ சேர்ந்தது.
காற்றின் வேகம் மானிக்கு 118 கிலோமீட்டரை விட அதிகமாக இருந்தால், அதனை சூறாவளி எனலாம் என்று பார்த்தோம், ஆனால் அதைவிடவும் பெரிய அரக்கன் ஒன்று உண்டு. அது தான் சூப்பர் தைபூன் (super typhoon), இதனது வேகம் மணிக்கு 234 கிலோமீட்டரை விட அதிகமாக இருக்கும்.
2013 நவம்பரில் பிலிப்பைன்ஸ் நாட்டையே உலுக்கிய சூறாவளி, தைபூன் ஹயான், இந்த சூப்பர் தைபூன் வகையைசார்ந்தது. இதன் அதிகூடிய தொடர்ச்சியான வேகம் (1 நிமிட அளவுகோலில்) மணிக்கு 315 கிலோமீட்டரை நெருங்கியது!
சரி, வெப்பமண்டல சூறாவளி ஒன்று எவ்வாறு உருவாகிறது என்று பார்க்கலாம்.
சூறாவளி உருவாகும் விதம்
ஒரு சூறாவளி ஒன்று உருவாவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும்.
- வெது வெதுப்பான சமுத்திர நீர், போதுமான ஆழம் வரை இருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 5 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் குறைந்தது 50m ஆழத்திற்கு வேண்டும்.
- குளிர்ச்சியான வளிமண்டல காலநிலை – இடியுடன் கூடிய மழை. இன்நிலையானது, வெப்பமான நீரில் இருந்து புயலுக்கு தேவையான சக்தியை உருவாக உதவுகிறது.
- சற்று ஈரலிப்பான மத்திய அடிவளிமண்டலம் (கடல் மட்டத்திலிருந்து 5km உயரம்வரை) – ஈரலிப்பாக இருப்பது இடியுடன் கூடிய மழைக்கான செயல்பாட்டை அதிகரிக்கும்.
- மத்திய தரைக்கோட்டில் இருந்து குறைந்தது 500 km தூரம். சூறாவளி காற்று சுழற்சியாக சுற்றுவதற்கு காரணம் கொரியோலிஸ் விளைவு (Coriolis effect) ஆகும். மதியதரைக் கோட்டுக்கு அண்மையில் இந்த விளைவின் சக்தியாற்றல் குறைவு என்பதால், புயலால் சுற்றுகைச்சக்தியை பெறமுடியாது.
- கடல் மேற்பரப்புக்கு அண்மைய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான சலன நிலை. புயலால் தனிச்சையாக உருவாகமுடியாது. அதற்கு தேவையான உந்து சக்தியை இந்த தொடர்ச்சியான சலனநிலை வழங்கவேண்டும்.
- அடிவளிமண்டலத்தில் காணப்படும் குறைந்தமேல்நோக்கிய காற்றோட்டம்.
மேற்சொல்லப்பட்ட காரணிகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படுமிடத்து, அங்கு ஒரு புயல் அல்லது சூறாவளி தோன்றலாம், அனால் கட்டாயம் தோன்றவேண்டும் என்றில்லை, காரணம், சூறாவளி உருவாகாமல் அதை தடுக்க மேலும் பல்வேறு காரணிகள் உண்டு அவை மேற்சொன்ன காரணிகளையும் தாண்டி சூறாவளியை கலைப்பதில் செல்வாக்கு செலுத்தலாம்.
எங்கு இந்த வெப்பவலய சூறாவளிகள் தோன்றலாம்
உலகில் மொத்தமாக 7 பகுதிகளில் இந்த வெப்பவலய புயல்கள் தோன்றும்.
- அட்லாண்டிக் பேசின்
- வாடகிழக்கு பசுபிக் பேசின்
- வடமேற்கு பசுபிக் பேசின்
- வடஇந்திய பேசின் (நமது வங்காளவிரிகுடா மற்றும் அரேபியக்கடல் சார்ந்த பகுதி)
- தென்மேற்கு இந்திய பேசின்
- தென்கிழக்கு இந்திய பேசின்
- ஆஸ்திரேலிய/ தென்மேற்கு பசுபிக் பேசின்
வடஇந்திய பேசினில் உருவாகும் வெப்பமண்டல புயல் அல்லது சூறாவளியே இலங்கை, அதை அண்டிய பகுதிகளில் பாதிப்பை விளைவிக்க கூடியன.
0 comments:
Post a Comment