September 15, 2015

பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும்

“பூமி வெப்பமாதல்”, அல்லது “குளோபல் வார்மிங்” என்கிற சொற்பதங்களை நீங்கள் கேள்விப்படிருபீர்கள் அடிக்கடி செய்திகளிலும் இணையத்திலும் அடிபடும் சொல்தான் இது. கேள்விப்படாவிடினும் இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களுக்கு இந்த “பூமி வெப்பமாதல்” பற்றிய ஒரு சிறிய புரிதல் உருவாகும் என நம்புகிறேன்.

இங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும். இப்படி கடல் மட்டம் அதிகரிப்பதால் கடல் மட்டத்திற்கு அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் நீரில் மூழ்கும். அங்கு வாழும் மக்கள் வேறு இடம் செல்லவேண்டும் – பிரச்சினை தொடங்கும்!
பூமி வெப்பமாதலினால் ஏன் கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது என்று நீங்கள் சிந்திக்கலாம். பாடாசாலையில் நீங்கள் ஒரு விடயத்தை விஞ்ஞான பாடவேளையில் படித்திருக்கக்கூடும். அதாவது வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க நீர் விரிவடையும், அதேபோல இங்கு சமுத்திரம் வெப்பமாக, அதன் நீர் விரிவடைகிறது. இது மட்டும் காரணமில்லை, பூமியின் வெப்பநிலை அதிகரிக்க பனி உருகுகிறது. நிலத்தில் இருக்கும் பனி உருகி கடலில் சேர்ந்து கடல்மட்டத்தை உயர்த்துகிறது.
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு கடல் மட்டம் ஒரே நிலையில் காணப்பட்டது. அதேபோல மனித சமுதாயுமும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் குடியேறி வாழத்தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்றுவரை கடல் மட்டம் 8 இன்ச் அளவுக்கு உயர்ந்துள்ளது, அதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் 2 இன்ச் அளவிற்கு உயர்ந்துள்ளது! இந்தத் தகவல் நமக்கு ஒரு முக்கிய விடயத்தைச் சொல்கிறது.
கடல் மட்டம் உயரும் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதே அந்த அபாயகரமான தகவல்.
கடல் மட்டம் அதிகரிப்பது என்பது நிலத்தின் அளவை மாற்றியமைக்கும். கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பகுதியில் பல மில்லியன் வருடங்களாக உறைந்த நிலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் அது ஏற்படுத்தும் பௌதீகவியல் மாற்றங்கள் மிகபாரியதாக இருக்கும் என்பது இந்த மாற்றங்களை அவதானித்துவரும் நிறுவனங்களான நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்தாபனங்களின் கருத்து.
பூமியின் பண்டைய வரலாற்றைப் பார்க்கும் போது ஒரு நூற்றாண்டுக்குள் கடல் மட்டம் பத்து அடிவரை அதிகர்ப்பதர்கான வாய்ப்பு உண்டு என்று பனிப்படலத்தை ஆராயும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் கருத்துப்படி, பனி வேகமாக உருகத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்டத்தில் இப்போது இருக்கிறது. ஆனாலும் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருக்கும் பனியைப் பற்றி இன்னும் தெளிவாக ஆராய்ந்தால் மட்டுமே உறுதியாக சொல்லமுடியும்.
நாசா 1992 இல் இருந்து கடல் மட்டத்தை செய்மதிகளைக் கொண்டு துல்லியமாக பதிவுசெய்துகொண்டு வருகிறது. 1992 இல் நாசா மற்றும் பிரான்ஸ் விண்வெளிக் கழகம் அனுப்பிய செய்மதிகள் Topex/Poseidon மற்றும் அவற்றின் புதிய பதிப்புக்கள் Jason-1 மற்றும் Jason-2 ஆகிய செய்மதிகள் அண்ணளவாக 2.9 இன்ச் சராசரிக் கடல் மட்ட உயர்வை இதுவரை பதிவுசெய்துள்ளது. 2.9 இன்ச் என்பது 7.4 சென்டிமீட்டர் அளவாகும்.


அதன் பின்னர் 2002 இல் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செய்மதி GRACE (Gravity Recovery and Climate Experiment) நாசா மற்றும் ஜேர்மன் கூட்டு முயற்சியில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிவந்து பூமியில் ஏற்படும் திணிவு (mass) மாற்றத்தைக் கணக்கிடும். 30 நாட்களில் நிலம் பெரிதாக மாறிவிடாது, ஆனால் கடல் நீர் அதிகளவில் இடம்பெயரும், மற்றும் பனி உருகிச் சேரும் நீரின் அளவும் கடலில் கலப்பதாலும், மற்றும் நீர் ஆவியாதல், மழை போன்ற காலநிலை மாற்றங்களால் குறித்த பிரதேசத்தில் இருக்கும் நீரின் அளவு மாறுபடும், இதனை GRACE பதிவு செய்கிறது.
இதுமட்டுமல்லாது multinational Argo array எனப்படும் 3000 இற்கும் அதிகமான கடலில் மிதக்கும் சென்சர்கள் கடல் நீர் மட்டம் மற்றும் வெப்பநிலை என்பவற்றை கண்காணிக்கின்றன.
Jason செய்மதி மூலம் நமக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. கடல் நீர் மட்டம் உயருவதைப் பற்றிய ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்ற பெருமை இவற்றையே சாரும். இந்த Jason செய்மதி நமக்கு அளித்த தகவலின் படி கடல் மட்டம் அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு நீர் நேரடியாக வெப்பமாகி விரிவடைவதாலும், மற்றைய மூன்றில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதாலும் ஆகும்.
இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு விடயம், கடல் நீர் மட்டம் உலகம் முழுவதும் சீராக அதிகரிக்கவில்லை, அண்ணளவாக இரண்டு மீட்டார் வரை நீர் மட்ட அதிகரிப்பில் வேறுபாடு காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. பூமியின் சில பகுதிகளில் நீர் மட்ட அதிகரிப்பில், அந்தப் பிரதேச சமுத்திர நீரோட்டம் மற்றும் காலநிலைக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஆனால் மிக முக்கியமான ஒன்று, இந்தப் பனிப்பாறைகள் உருகும் வீதம் அதிகரிக்க அதிகரிக்க, மற்றைய இயற்கைக் காரணிகளை இது விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். அதன் பின்னர் உலகம் முழுதும் கடல் நீர் மட்டம் அதிகரிப்பில் இந்த பனிபாறைகள் உருகுவதே செல்வாக்குச் செலுத்தும்.
மூலம் - www.nasa.com

0 comments:

Post a Comment