கடந்த 1976 ல் மேற்கு ஆபிரிக்க நாடான காங்கோவில் எபோலா நதிக்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு 'எபோலா வைரஸ்' என பெயர் வைக்கப்பட்டது. இதன்பின் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த நோயின் தாக்கம் தெரியும். இதில் ஏராளமானோர் செத்து மடிவர். இந்த நோயை குணமாக்குவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் முன் எப்போதையும் விட தற்போது மிக தீவிரமாக இந்த நோய் தாக்கத் துவங்கியுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் எல்லையை கடந்துள்ளதாக கூறப்படும் இந்த வைரஸ் எமன், மற்ற நாடுகளின் பக்கமும் இதன் கொலை வெறியை திருப்பக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கான விஷ வித்து கடந்தாண்டு இறுதியில் மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் உள்ள குயிக்கேடோய் என்ற சிறிய நகரத்தில் ஊன்றப்பட்டது. இரண்டு லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரம் மற்ற ஆபிரிக்க நாடுகளான சியாரா, லியோன், லைபீரியா ஆகியவற்றின் எல்லையில் அமைந்து உள்ளது. இங்கு கூடும் வாரச்சந்தை மிகவும் பிரபலம். இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக அண்டை நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் குயிக் கேடோய் நகரில் வசித்த 2 வயது ஆண் குழந்தைக்கு 'எபோலா வைரஸ்' பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்பட்டன. டிசம்பர், 6ம்  திதி இந்த நோய் பாதிப்பு அதிகமாகி அந்த குழந்தை இறந்தது. ஒரு வாரத்துக்கு பின் அந்த குழந்தையின் தாயும் அதன்பின் குழந்தையின் பாட்டியும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஆனாலும் அந்த நகரத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எபோலா வைரஸ் தாக்கப்பட்டதால் தான் இவர்கள் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. குழந்தையின் பாட்டியின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த மேலும் இரண்டு பேருக்கு சில வாரங்களுக்கு பின் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு அடுத்த சில நாட்களில் இறந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியரும், டாக்டரும் அடுத்தடுத்து இந்த வைரஸ் தாக்கப்பட்டு இறந்தனர்.
எபோலா வைரஸ் நோய் (Ebola virus disease) அல்லது எபோலா இரத்தப் போக்கு காய்ச்சல்(Ebola hemorrhagic fever) என்று இந் நோய் அறியப்பட்டுள்ளது. இது ஓர் உயிர் காவி நோயாகும். கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர். எபோலா காய்ச்சல் பாதித்தால் முதலில் வயிற்றுப் போக்கும் வாந்தியும் ஏற்படும். பிறகு ஏராளமாக இரத்தம் வெளியேறும். கண், காது, மூக்கு, வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் இருந்தும் ரத்தம் வெளியேறும். இதன் காரணமாக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி, தொண்டைவலி ஏற்படும். உடல் முழுமையாக தளர்ந்து விடும்.
முதலில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடுவதுண்டு. ரத்தம் அதிகமாக வெளியேறிய பிறகுதான் விபரீதத்தை உணர்வார்கள். இந்த காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் இரத்த அழுத்தம் குறையும். நாடித்துடிப்பும் பல மடங்கு உயரும்.
இது எபோலா வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விட்டதை உறுதி செய்யும். அதன்பிறகு எபோலா காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால் எழுந்து உட்கார கூட முடியாது. படுத்த படுக்கையாகக் கிடந்து போய் சேர வேண்டியதுதான். தொடுதல், முத்தமிடுதல், கட்டித் தழுவுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவலாம். ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, தண்ணீர் மற்றும் உயிரணுக்கள் மூலமும் இவ் வகை வைரஸ் பரவும்.                              
இதைத் தொடர்ந்து அருகில் உள்ள நகரங்களில் வசித்த இவர்களின் உறவினர்களுக்கும் இந்த நோய் பரவியது. மார்ச் மாத மத்தியில் ஒட்டு மொத்த கினியாவிலும் நோய் பாதிப்பு தெரிந்தபின் தான் 'எபோலா' வைரஸ் வேகமாக பரவி வருவதை சுகாதார அதிகாரிகள் உணர்ந்தனர். அதற்குள் அருகில் உள்ள சியாரா, லியோன், லைபீரியா ஆகிய நாடுகளில் வசித்த பலருக்கு இந்த நோய் பரவி விட்டது. இந்த மூன்று நாடுகளுமே மிகவும் ஏழ்மையான நாடுகள் என்பதாலும் மூன்று நாடுகளுக்கும் இடையே அதிகப்படியான மக்கள் போக்குவரத்து உள்ளதாலும் நோய் வேகமாக பரவியது. லைபீரியாவில் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கு பின் இந்த நோய் குறித்த அறிகுறி தெரியவில்லை. இதனால் 'எபோலா வைரஸ் இனி பரவ வாய்ப்பில்லை' என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் சில மாத இடைவெளிக்கு பின், முன்பை விட மிக வேகமாக இந்த நோய், தற்போது பரவத் துவங்கியுள்ளது. லைபீரியாவில் மட்டும், இதுவரை 156 பேரின் உயிரை இந்த நோய்காவுவாங்கியுள்ளது.  
 இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளான கானா, நைஜீரியா, கேமரூன், காங்கோ ஆகியவற்றிலும் இந்த நோயின் தாக்கம் தென்படத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1779 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 961 பேர் இறந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நோயின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நோயின் மையமாக சியாரா லியோன் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நோய் வேகமாக பரவி வருவது சர்வதேச நாடுகளிடையே பீதியைஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், கினியாவிலிருந்து சென்னைக்கு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு இந்த நோயின் தாக்கம் இருப்பதாக வெளியான செய்தியாலும் டில்லி மும்பை ஆகிய நகரங்களில் இந்த நோய் தாக்கத்துடன் சிலர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தியாலும் இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மேற்கு ஆபிரிக்க நாடுகளை தாண்டி மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் எமன் கால் பதித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நோய் வைரஸினால் உண்டாவதால் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் உயிர் பிழைக்கும் வாய்புண்டு. எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர் இழப்பைச் கீராக்க அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும். அமெரிக்க ஆராய்ச்சி கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வரும் எபோலாவுக்கு எதிராக மாற்று மருந்தின் ஆராய்ச்சியில் ஆரம்பநிலை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எபோலாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த இரு அமெரிக்கர்களுக்கும் சோதனை முயற்சியாக இந்த மருந்து அளிக்கப்பட்டு அவர்கள் எபோலாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. இதற்கு ‘ஸ்மேப்' என பெயரிடப்பட்டுள்ளது.