வருடம் தோறும் பயன்படும் மின்னணுச் சாதனங்களின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீட்டிற்கு ஒரு போன் என்கிற காலம் போய், ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், லேப்டாப் என்று காலம் மாறிவிட்டது. போன் பில் தொடக்கம் கரண்ட் பில் வரை, இ-பில் மூலம் கட்டணம் செலுத்தி சூழலைக் காப்போம் என்று பலரும் செய்யும் வேளையில், இந்த பில்களை கட்டப் பயன்படும் மின்னணுச் சாதனங்கள்கூட ஒரு நாள் பழுதடைந்து குப்பைக்கு செல்லவேண்டிய காலம் வரும் என்பதனை பெரும்பாலும் பலர் உணர்வதில்லை.
மின்னணுச் சாதனங்கள் குப்பைக் கிடங்கில் எறியப்படும் போது, அதனில் இருக்கும் மூலப்பொருட்களும், அதனை உருவாக்க செலவிடப்பட்ட சக்தி என்று பல விடயங்கள் வீணாகப்போகும்.
ஐக்கியநாடுகள் சபையின் International Telecommunication Unionனின் அறிக்கையின் படி, 2016 இல் மட்டும் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் (electronic waste) உருவாகியுள்ளது. இந்தக் கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களின் மதிப்பு மட்டுமே 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு ஸ்மார்ட்போன் கழிவுகளில் இருக்கிறது.
இதில் வெறும் 20% மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகளில் 5% மானவை ஆபிரிக்காவில் இருந்து உருவாகியுள்ளது. ஆனால் அவற்றில் ஒரு வீதம் கூட மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படவில்லை. ஐரோப்பா மற்றும் ரஷ்சியா ஆகிய பிராந்தியங்களில் இருக்கும் சட்டதிட்டங்கள் காரணமாக உருவாகிய 28% கழிவுகளில் 35% மானவை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அமேரிக்கா 14% மான உலக மின்னணுக் கழிவுகளுக்கு காரணம், ஆனால் இதில் வெறும் 25% இற்கும் குறைவான கழிவுகளே மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது. உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானா சீனா 16% உலக கழிவுகளுக்கு காரணம், ஆனால் இதில் வெறும் 18% மட்டுமே இங்கே மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையின் கணிப்பின் படி ஒவ்வொரு வருடமும் உருவாகும் கழிவு 4% வளர்கிறது. 2007 இல் உலக சனத்தொகையில் 20% மட்டுமே இணையத்தை பயன்படுத்தியது. ஆனால் தற்போது இந்த அளவு 50% மாக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் மின்னணுக் கழிவுகள் பல்வேறு சூழல் பாதிப்புகளை உருவாக்கும் என்றாலும், இதில் பொருளாதார பாதிப்புகளும் அடங்கும். பல நாடுகள் (2014 இல் இருந்து இந்தியா உட்பட) மின்னணுக் கழிவுகளை கையாளுவதற்கான சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதால், அது ஒரு நல்ல விடையம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.