இணையம்
தொழிற்படுவதன் அடிப்படை அம்சம் 1960 களில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. Packet switching (பக்கட் நிலைமாற்றல்) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த circuit switching (சுற்று நிலைமாற்றல்) தொழில்நுட்பத்தை விட மேம்படுத்தப் பட்டதாக இருந்தது.
சுற்று நிலைமாற்றல் (circuit
switching)
அந்தக் காலத்தில், அதாவது பழைய அனலாக் (Analog) தொலைபேசி முறையில், நீங்கள் யாரையாவது
தொலைபேசியில் அழைக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள்
தொலைபேசிக் இணைப்பகத்திற்கு அழைக்கவேண்டும், அப்படி அழைத்து, நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கத்தையோ அல்லது முகவரியையோ கூறினால், இணைப்பகத்தில் இருப்பவர், உங்கள்
தொலைபேசியின் சுற்றை, நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவரின் சுற்றோடு
இணைத்துவிடுவார்.
இது எப்படி இருக்கும் என்று சிந்திக்கவேண்டும்
என்றால், உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் தொடர்புகொள்ளும் நண்பர்
வீட்டிற்கு நேரடித் தொடர்பு, அதாவது நீளமான மின்கம்பி
உங்கள் இருவரை மட்டும் இணைப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் பேசிமுடிக்கும்
வரை அந்த இணைப்பை, தொலைபேசி இணைப்பகத்தில் இருப்பவர் இணைத்து வைத்திருப்பார்.
பொதுவாக நீங்கள் தொடர்புகொள்ளும் போது, குறித்த இணைப்பு வேறு ஒரு பாவனையில் இருந்தால், நீங்கள் அழைப்பை முன்பதிவு செய்யவேண்டும், மற்றைய இணைப்பு பாவனையில் இருந்து முடிந்தவுடன், உங்களுக்கு, இணைப்பகத்தில்
இருந்து அழைப்பு வரும், அதன்
பின்னர் நீங்கள் நண்பருடன் பேசலாம்.இதில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு, ஒரு
நேரத்தில் ஒரு இணைப்பு மட்டுமே குறித்த சுற்றில்
பயன்படுத்தப்பட முடியும்.
பக்கட் நிலைமாற்றல் (Packet
switching)
இது டிஜிட்டல் நிலைமாற்றல் தொழில்நுட்பமாகும்.
ஒரு சுற்றில் பயணிக்கும் தகவல்களை சிறு சிறு துண்டுகளாக உடைத்து, அவற்றை குழுவாக்கி (இந்தக் குழுக்களுக்கு பக்கட் என்று
பெயர்), அவற்றை குறித்த சுற்றில் அனுப்புதல். இங்கு ஒரே நேரத்தில்
பல்வேறுபட்ட இணைப்புக்களை ஒரே சுற்றில் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, பல குடும்பங்கள் வசிக்கும்
தொகுதிக்குடியிருப்பில் ஒரு கடதாசிப் பெட்டி (post box) இருக்கிறது என்று
வைத்துக்கொள்வோம். ஒரே கடதாசிப் பெட்டியை பல்வேறு நபர்கள் பயன்படுத்தலாம் அல்லவா.
அப்படிப் பயன்படுத்த ஒவ்வொரு கடிதத்திலும் முகவரி குறிப்பிடப் பட்டிருந்தால், குழப்பமின்றி அதனைப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களது கடிதத்தை எடுக்காமல் தங்கள் கடிதத்தை மட்டும்
எடுத்துக்கொள்வார்கள்.
அதேபோலத்தான் இங்கும், ஒரே இணைப்பை ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தினாலும், பக்கட்டில் இருக்கும் முகவரியை வைத்துக் கொண்டு, சரியான இடத்திற்கு குறித்த பக்கட் போய்ச் சேர்ந்துவிடும்.
இன்று நாம் பயன்படுத்தும் இணையத்தின் அடிப்படியே இந்த
பக்கட் நிலைமாற்றல் தொழில்நுட்பம்தான்